தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் தெருவிற்குள் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்களை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தை செல்போனில் படம் பிடித்த மூன்று இளைஞர்களை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமிபுரம் சருக்குப்பட்டியில் தெருவிற்குள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று அதைத் தட்டிக் கேட்ட முரளி என்பவர் தாக்கப்பட்டார். முரளியை தாக்கியதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டித்தும், உடனடியாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஒரு பிரிவினர் ஆண்கள் பெண்கள் என சுமார் மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலைவர்கள் காவல்துறையினரிடம் தங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தெலுங்கில் பேசினர். இதனை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேர் செல்போனில் படம் பிடித்ததுடன் போராட்டத்தில் இருப்பதுபோல செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த கூட்டமும் அந்த இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியது.
அந்த இளைஞர்கள் 3 பேரையும் விரட்டிச் சென்ற பொதுமக்கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவர்களை மீட்டு அழைத்துச் செல்ல முயன்ற போதும் பெண்களும் அடிக்க பாய்ந்தனர். இதற்கிடையில் செல்போனில் படம் பிடித்த ஒருவர் ஹெல்மெட்டுடன் நழுவ முயன்று கூட்டத்திடம் சிக்கினார். அவரையும் போராட்டக்காரர்கள் சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து மூன்று பேரையும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்ட காவல்துறையினர் பலத்த எதிர்ப்புக்கிடையே அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.