தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இப்பகுதி மக்கள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தும், இதுகுறித்து கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. அரசின் புறக்கணிப்பு பொதுமக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பை தொடங்கி தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், பொதுமக்களிடம் நன்கொடையாக நிதியை வசூலித்து அதன் மூலம் பெரிய குளத்தை தூர்வாரும் பணியில் கடந்த 32 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் தொடங்கிய முதல் நாளில் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ரூ. 1 லட்சம் நன்கொடையாக கொடுத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு விவசாயிகள், தொழிலாளிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் குளம் சீரமைக்க தாராளமாக நிதியும், மற்ற உதவிகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினர் சார்பில் கிராமத்தில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில் வசூலான தொகை ரூ 1 லட்சத்து 51 ஆயிரத்து 501 ஐ வியாழக்கிழமை அன்று ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது குறித்து பேசிய விவசாய சங்க நிர்வாகிகள், கிராமத்தினர் உதவிகள் செய்து ஊக்கமளிப்பது எங்கள் பணிக்கு வேகம் கொடுக்கிறது.
இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பை தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் உதவிகள் செய்ய தயாராக உள்ளனர். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டு நிலத்தடி நீரை பெருக்கி வறட்சியில்லாத மாநிலமாக்க முடியும். அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞாகள் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்றனர். இதே போல தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு, கிராமத்திலும் இளைஞர்களால் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் களத்தூரில் தொடங்கிய இளைஞர்களின் நீர்நிலை சீரமைப்பு பணிகள் அப்படியே பரவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, உள்ளிட்ட பல கிராமங்களிலும் பரவி இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான் கொத்தமங்கலத்தில் பணிகளைத் தொடங்கிய இளைஞர்களை ஊக்கப்படுத்த 100 நாள் வேலையில் குளம் வெட்டி சேமித்த ரூ. 10 ஆயிரம் பணத்தை குளம் சீரமைக்க இளைஞர்களிடம கொடுத்தார் ராஜம்மாள் பாட்டி. அதன் பிறகு பலதரப்பிலும் நன்கொடைகள் கிடைத்து வருவதால் பணிகள் 75 நாட்களைக் கடந்தும் தொடந்து நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்பையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் சிங்கப்பரில் வசிக்கும் எம்.ஆர்.ரமேஷ் என்ற இளைஞர் குளம் சீரமைக்க இயக்கப்படும் ஜேசிபிக்கு ஒரு மாத வாடகை ரூ. 80 ஆயிரத்தை மொத்தமாக வழங்கி இருக்கிறார். இந்த பெரிய உதவிக்காக இளைஞர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.