சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை திறக்க வலியுறுத்தி, வரும் திங்களன்று தமிழகம் முழுவதும் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளை மூடி போராட்டம் நடத்துவதாக வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற வணிகர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பரவிய நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டது. ஆனால் திருமழிசையில் உருவாக்கப்பட்ட தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை என்றும், வாகனங்களை உள்ளே எடுத்து செல்ல முடியவில்லை எனவும் வியாபாரிகள் குற்றச்சாட்டுகளையும், போராட்டத்தையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளை மூட வணிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள பிற மார்க்கெட்டுகளை திறக்க வணிகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மார்க்கெட்டுகளை திறந்தால் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவோம் எனவும் உறுதி அளித்துள்ளனர்.