கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்; சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலத்தை கைப்பற்றும்போது விவசாயிகளை மிரட்டக் கூடாது; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தரமாக வேலை வழங்க வேண்டும்; இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சியை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசன், மதிமுகவை சேர்ந்த துரை வைகோ ஆகியோரும் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர்.
முன்னதாக புதுக்குப்பத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்த போராட்டக் குழுவினர், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட எஸ்.பி, வடக்கு மண்டல ஐ.ஜி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உள்ளிட்டவர்கள் தலைமையில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி. தங்களது அனுமதியைப் பெறாமல் நிலத்தைப் பறிக்க முயல்கிறது; நிரந்தர வேலை தராமல் ஒப்பந்த அடிப்படையில் வேலை தருகிறது; இதனால் நாங்கள் வாழ்வாதாரமின்றி கிடக்கிறோம்; எங்களுக்கு நிரந்தர வேலை மட்டுமல்ல ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும்; என்.எல்.சி எங்களுடைய வேலை வாய்ப்புக்காக தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வடமாநிலத்தவர்களுக்கே அதிகமான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது எனத் தொடர் குற்றச்சாட்டுகளை கோஷங்களாக வெளியிட்டு இப்போராட்டமானது தற்பொழுது நடைபெற்று வருகிறது.