மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து திருச்சியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறையூர் கடைவீதியில் இன்று காலை மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் நடைபெற்றது.
இன்று ஊரடங்கையும், காவல்துறை தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ந.க.தமிழாதன் , தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் வின்சென்ட் ம க .இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் பொதுச் செயலர் தோழர் சுந்தர ராசு மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு புத்தூர் முகூர்த்தம் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக உறையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதீன், தோழர் வின்சென்ட் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மா.தலைவர் வாழ்த்தி பேசினார். தோழமை அமைப்பினர் இஸ்லாமிய நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசமிட்டனர். ஏராளமான பொதுமக்கள் கூடி ஆதரவளித்தனர். பல காவலர்கள் இவ்வளவு நாள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவாங்கிய நற்பெயர் கெட்டு போய் விட்டதாக நொந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து மக்கள் அதிகாரம் செழியன் பேசுகையில்,
தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும், சொற்ப வருமானத்தையும், சீரழித்ததில் டாஸ்மாக் குடிபோதைக்கு முக்கிய பங்கு உண்டு. கரோனா ஊரடங்கால் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு கடந்த 40 நாட்களாக காரணமாக எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை. டாஸ்மாக் மூடப்பட்ட காலத்தில், குடிக்க இருந்த பணம், ரூ.100, 200 கூட சாதாரண மக்களுக்கு அரிசி பருப்பு வாங்கி உயிர் வாழ பயன்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு வருகிற மே 7 –ம் தேதி முதல் டாஸ்மாக்கை மீண்டும் கனஜோராக திறந்தது.
குடிக்கும் பெரும்பான்மையான ஆட்கள் கடந்த 40 நாள் கால இடைவெளியில் குடிக்காமல் இருந்தனர். இந்த குடியை நிறுத்தியதால் பாதிக்கபட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மையத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதுதான் சரியான தீர்வு. ஆனால் மாநில அரசின் வருமானம் போகிறது. சாராய ஆலை அதிபர்களின் வருவாய் போகிறது என்பதற்காக மீண்டும் டாஸ்மாக்கை திறக்கக்கூடாது. கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.
தமிழகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சிதைந்த குடும்பங்கள், விதவைகளான பெண்கள், நடைபெற்ற போராட்டங்கள், தேசதுரோக உள்ளிட்ட எண்ணற்ற வழக்குகள், போராட்டத்தில் உயிரிழந்தவர்கள், சிறை சென்றவர்கள் என தமிழகத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்கு நீண்ட அர்ப்பணிப்பான தியாக வரலாறு உண்டு.
மத்திய மாநில அரசுகள் 55 நாட்கள் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் 40 நாளை கடந்துள்ள நிலையில் மிக அற்பமான அளவில்தான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அனைவருக்கும் கொடுக்கவில்லை. மக்களை தியாகம் செய்ய சொல்லி ஏளனம் செய்கிறது. படுகுழியில் விழுந்த உலகபொருளாதார நெருக்கடியால், இனி அனைவருக்கும் வேலை என்பது இல்லை. இருக்கும் வேலையும் பறிபோகும். இந்த நிலையில் டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்களின் கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் டாஸ்மாக் மூலம் அட்டையாக உறிஞ்ச போகிறது. அதை அனுமதிக்க கூடாது என்றார்.