ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகவும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாகவும் ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டுவந்த நேதாஜி பெரிய மார்க்கெட் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு தற்போது மொத்த விற்பனையும், சில்லறை விற்பனை பணியும் நடைபெற்று வருகிறது. மொத்த விற்பனை இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரையும் நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே ஒரு கடைக்கு 3 மீட்டர் இடைவெளிவிட்டு மற்றொரு கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் வகையில் வட்டம் வரையப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் ஈரோடு மேட்டூர் சாலை வழியாக வரும்போது ஒரு மீட்டர் இடைவேளை விட்டு ஒரு மீட்டர் நிற்கும் வகையில் வட்டம் போடப்பட்டு அதில் பொது மக்கள் வரிசையாக நின்றனர்.
50 நபர்கள் 50 நபர்களாக தனித்தனியாக மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது முதலில் 50 நபர்கள் உள்ளே சென்றவுடன் மற்ற நபர்கள் நுழைவாயிலில் வரிசையாக நிற்பார்கள். பின்னர் அந்த 50 நபர்களுக்கு காய்கறி வாங்கி சென்றவுடன் அடுத்த 50 நபர்கள் காய்கறி வாங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் டெல்லி மாநாடுக்குச் சென்றவர்கள் உட்பட 40 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு இன்னமும் ரத்த பரிசோதனை முடிவு வரவேண்டியதுள்ளது. இந்நிலையில் நேற்று கவுந்தப்பாடி மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இன்று காலை முதல் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டது.
அதேபோல் கவுந்தப்பாடியிலும் ஒவ்வொரு வீதிகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டது. மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு காவல் பணி ஸ்டிரிக்ட் செய்யப்பட்டுள்ளது.