
புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்றும், இதனால், மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. இதையடுத்து, அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி, அப்போதே அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, 4 மாடிகளிலும் உள்ள நிதி, நலவாழ்வு உள்பட பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே வந்திருந்ததைப் பார்த்த அவர், கடும் கோபமடைந்தார். மேலும் ஊழியர்களிடன் ஏன் பணிக்கு வர தாமதம் என விசாரித்தார். பின்னர் பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.