விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவர் ஒருவர். இவரும் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். அந்தப் பழக்கத்தினால் நண்பர்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். அந்த அடிப்படையில் மாணவருக்குச் சொந்தமான மகேந்திரா காரில் புதுச்சேரி சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள பொம்மையார்பாளையம் பகுதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சாப்பிடச் சென்றனர்.
இவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு டிப்டாப் ஆசாமி தான் ஒரு போலீஸ் என்று கூறி அவர்களது காரை நிறுத்தியுள்ளனர். தானும் ஓட்டல் வரை காரில் வருவதாக அந்த காரில் ஏறிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் மாணவரை மட்டும் காரிலிருந்து இறக்கி விட்டுவிட்டு மாணவியைத் தனியாகக் கொஞ்ச தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த டிப்டாப் ஆசாமி மாணவருடன் நீ சுற்றும் விஷயத்தை உனது குடும்பத்தினரிடம் தெரியப் படித்துவிடுவேன் அதை அவர்களிடம் தெரியாமல் இருப்பதற்கு நீ லஞ்சமாகப் பணத்தைத் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். மாணவியிடம் அந்த அளவிற்கு பணம் இல்லாததால் அந்த மாணவியை மிரட்டி அவரிடம் இருந்து 3 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மீண்டும் ஹோட்டல் முன்பு மாணவி கொண்டு வந்து விட்டு விட்டு போலீஸ் எனக் கூறிய அந்த டிப்டாப் ஆசாமி தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவியும் அவரது நண்பரும் கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மிரட்டி நகை பறித்துச் சென்ற அந்த டிப்டாப் ஆசாமி தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுபோன்று கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஹோட்டல்களுக்கும், விடுதிகளுக்கும் வரும் காதல் ஜோடிகளை மடக்கி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதாக அப்பகுதியில் இருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.