கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகள் மூடப்பட்டிருந்தன. 4ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து, தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை தியாகராயநகரில் இதுவரை மூடப்பட்டிருந்த பெரிய ஜவுளிக்கடைகள், செருப்புக் கடைகள், கவரிங் நகைக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகங்கள் முதலியவை ஜூன் 1ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. அரசு அறிவுறுத்தலின்படி ஏ.சி. எந்திரம் இயக்கப்படாமல் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இக்கடைகள் செயல்பட்டன.
தியாகராயநகரில் உள்ள கடைகளின் முன்பே வாடிக்கையாளர்கள் சோப்புப் போட்டு கைகளைக் கழுவுவதற்காக தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடைக்கு உள்ளே செல்லும்போது வாடிக்கையாளர்களின் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.