சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இது தொடர்பாக நேற்று எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்தத் தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களைத் தமிழகத்தின் நீர்வளத்துறைக் கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்தத் தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களைத் தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் உரிய அனுமதிப் பெறாமல் நடத்தப்படும் சிலந்தி ஆற்றின் தடுப்பணைக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இதனைத் தானாக முன்வந்து பதிவு செய்து விசாரித்தது. அப்பொழுது கேரள அரசு 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவில்லை. உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீரைப் பூர்த்தி செய்வதற்கான கலிங்கு அமைக்கப்பட்டு வருகிறது' எனக் கூறப்பட்டது. இதைக்கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் 'எந்தக் கட்டுமான பணிகள்மேற்கொள்ளதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உரிய அனுமதிகளை பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதிப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும்' எனக் கேரளா அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.