
தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒமிக்ரான் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஒமிக்ரான் கரோனா தொற்று இரண்டு பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 65 வயது மற்றும் 45 வயதான ஆண்களுக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட அந்த இருவர் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது.

கரோனா ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம்- கேரளா இடையே பொதுப்போக்குவரத்து 23 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் ஆரம்பித்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடு காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்படுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தடை விதிக்கவேண்டிய அவசியம் தற்பொழுது இல்லை. ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் டெங்குவிற்கு இதுவரை 617 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்'' என்றார்.