வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலக்காஸ் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி இரவு ஏ.சி. பைப் வழியாக சுவற்றைத் துளையிட்டு கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், சி.சி.டி.வி. கேமராவை ஸ்பிரே அடித்து மறைத்துவிட்டு, உள்ளிருந்து தங்கம், வைரம், பிளாட்டின நகைகள் என சுமார் 15.5 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், வேலூர் குண்டுபாளையத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தும், சிலரை கஸ்டடியில் வைத்தும் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் மறைத்துவைத்திருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கைப்பற்றியதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி ஒடுகத்தூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். அதில் 15.5 கிலோ நகைகளில் ஒரு கிலோ வைர நகைகள் மற்றும் 100 கிராம் பிளாட்டினம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிங்கமுக மாஸ்க் அணிந்துக்கொண்டு, சி.சி.டி.வி. கேமராவில் ஸ்பிரே அடித்து மறைத்த டிக்காராமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்பு உடையவர்கள் என 9 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.