கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பாய்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவரும் இட்டகவேலியைச் சேர்ந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் காதலிக்கும் போது பல சுற்றுலா தலங்களுக்கு சென்றதோடு, அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உள்ளனர்.
இந்த நிலையில், அப்பெண்ணின் பெற்றோர்கள், மகளின் செல்போனை சோதனை செய்த போது அதில் அபிலாஷூம் தங்களது மகளும் சோ்ந்து இருக்கிற புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மகளிடம், பெற்றோர்கள் கேட்டபோது, “நானும் அபிலாஷும் காதலித்து வருகிறோம். அவனை தான் திருமணம் செய்து கொள்வேன்” என உறுதியாக கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அபிலாஷிடமிருந்து மகளை பிரிக்க பெற்றோர்கள் எடுத்த முயற்சியின் பலனாக அபிலாஷிடம் பேசுவதை அவர்களது மகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துள்ளார். இது அபிலாஷுக்கு ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் அப்பெண்ணுக்கு பெற்றோர்கள் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிந்து, நேற்று 7ம் தேதி திருமணமும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
இதனைத் தெரிந்துகொண்ட அபிலாஷ், ‘ஆசை நாயகனின் வாழ்க்கை ஆரம்பம் விழா’ என்ற தலைப்பில் அபிலாஷ் மற்றும் அந்த பெண் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை போட்டு அதில் திருமணம் நாள் திருமணம் நடக்கும் இடமும் குறிப்பிட்டு நடிகர் அஜித்தின் புகைப்படத்தோடு, அஜித் நடித்த படத்தின் பெயரை வைத்து கவிதையாக எழுதி அதனை ஊர் முழுக்க ஒட்டியுள்ளார் அபிலாஷ். அதுமட்டுமல்லாமல், திருமணம் செய்ய இருந்த கருங்கல்லை சேர்ந்த அந்த மணமகனின் வீடு மற்றும் திருமணம் மண்டபத்திலும் போஸ்டரை ஒட்டியதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.
இது அப்பெண்ணுக்கும், அவரின் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாரை கண்டு அபிலாஷ் தலைமறைவானார். அதேசமயம், போலீஸ் பாதுகாப்புடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.