தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளையுடன் (31.07.2021) நிறைவடைகிறது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், "தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை. எனவே, வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்க்கிறோம்" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடரும் எனக் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்ததற்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி நன்றி தெரிவித்தார். அவரது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியைக் காப்பாற்றிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.