தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பதற்காக திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஆலையை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், விசிகவினர் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர். இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனு அளிக்க வந்திருந்த ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.