தஞ்சை பெரியகோயிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜன் சிலை, அவரது பட்டத்து இளவரசி லோகமாதேவி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு ரூபாய் 150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. பின்னர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், உதவி கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் உள்ளிட்ட சிலைதடுப்பு போலீசார்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
பின்னர் சிலைகள் குஜராத் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதை உறுதிபடுத்திய போலீசார் சிலைகளை கைப்பற்றி சென்னைக்கு வியாழன் அன்று எடுத்து வந்தனர். வெள்ளியன்று சென்னையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சிலைகளை எடுத்து வந்தனர். சிலைகள் வருவதை அறிந்த இந்து அமைப்பின் மாவட்ட செயலாளர் குருவாயூரப்பன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயதீசன், வர்த்தக சங்க செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட சிதம்பரம் நகர பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலில் குவிந்தனர்.
பின்னர் சிலைகளுக்கு வெடிவெடித்து வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கும்பமரியாதை கொடுத்து வரவேற்று சிலைகளை நடராஜர் கோயிலின் கருவரையில் நடராஜர் சிலைக்கு எதிரே நிற்க வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் கோயிலின் தேவசபையில் சிறிது நேரம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனை தொடர்ந்து சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த எடுத்து சென்றனர்.
இதுகுறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு உதவி கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக்நடராஜன் செய்திளார்களிடம் பேசுகையில், ராஜராஜன் சோழன் வாழ்ந்த காலத்தில் 66க்கும் மேற்பட்ட பஞ்லோக சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜராஜன்சோழன் உள்ளிட்ட 20 மேற்பட்ட சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையது. தற்போது 2 சிலைகளை கைபற்றியுள்ளோம். மீதமுள்ள சிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் ராஜராஜனுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அதனால் இந்த வழியாக செல்லும் போது நடராஜரை தரிசிக்க கோயிலுக்கு சிலைகளை எடுத்து வந்தோம். இதனை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர் ஆணைபெற்று தஞ்சை பெரிய கோயிலில் வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்படும் என்றார்கள்.
இதுகுறித்து முன்னாள் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் பாட நடராஜர் கைபட எழுதிய ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தெருவில் உள்ள அருங்காட்சியகத்தில் வெள்ளி பேழையில் பாதுகாத்து வைத்துள்ளனர். இதனை கைப்பற்றி சிதம்பரம் கோயிலில் வைக்கவேண்டும். மேலும் பல கோடிகள் மதிப்புடைய நடராஜர், மாணிக்கவாசகர் பஞ்லோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சிலைகளை மீட்டு கோயிலுக்கு எடுத்துவரவேண்டும் என்று கூறினார். ஓலைச்சுவடிகள்,சிலைகள் திருட்டுக்கு அப்போதைய கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்றார்.
இதுகுறித்து சிலைதடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுவிடம் கேட்டபோது சம்பந்தபட்ட வழக்கை பற்றி மட்டும் கேளுங்கள் என பதில் கூற மறுத்துவிட்டார்.