காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதி 6 வார அவகாசத்துக்குள் மத்திய அரசு காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவில்(பிப்ரவரி 16-மார்ச் 29) மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் மற்றும் தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என கடந்த சனிக்கிழமை மனுதாக்கல் செய்தது. இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து, இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் வழக்கறிஞர் இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும். தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிக்காது. காவிரி பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்’ என்றும் தலைமை நீதிபதி கூறினார்.