சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து ஓரிரு தினங்கள் முன் செய்தியாளர்களைச் சந்தித்த டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி, “புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டிற்கு ‘கலைஞர் மு.கருணாநிதி’ ஸ்டாண்ட் என வைத்துள்ளோம். அவருக்கு கிரிக்கெட்டில் எவ்வளவு ஆர்வம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். இங்கு போட்டிகள் நடக்கும் போது அதிகமான போட்டிகளை நேரில் வந்து கண்டவர்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கலைஞர் திறந்து வைத்தார். இப்பொழுது கலைஞர் பெயரிலான பெவிலியனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.