Skip to main content

மோடி எனக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார்? கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Stalin's speech in kolkata


திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க அரசுக்கு எதிராக இன்று (19-01-2019) கொல்கத்தாவில் கூட்டிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

கூட்டத்தில் பேசிய அவர், 
 

வங்கத்துப் புலிகளே!
 

உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்!
 

பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது.
 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.
 

தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார். எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள்.
 

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரம் மிக்க இனங்களில் வங்கமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.
 

வங்கத்துப் புலிகளே!
 

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பதை தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன். இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். வேறு வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய சிந்தனை ஒன்று தான் “பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்”.


 

Stalin's speech in kolkata


‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைத்தான் நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகச் சொன்னார்கள். ஆமாம் நாம் வேறு வேறாக இருந்தாலும் நம்முடைய லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருக்குமானால் வெற்றி நமக்குத்தான். தோல்வி நரேந்திர மோடிக்குத்தான்.
 

சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி என்ன சொல்லி வந்தார், தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் மைக் பிடித்ததும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட பயமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்குத் தெரிந்துள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் இங்கு வர முடியாத தலைவர்களுக்கும் இந்தக் கூட்டணிக்குள் வர தயங்கிக் கொண்டு இருக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான்....
 

நம்முடைய ஒற்றுமை நரேந்திரமோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம் என்பதுதான்.
 

என்னிடமே சிலர் கேட்கிறார்கள்...
 

நரேந்திரமோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று, அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1000 பொய்களைச் சொல்லி இருப்பார்.
 

அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? இந்திய மக்கள் தலையில் கல்லைத்தான் போட்டார். வாயில் மண்ணைப் போட்டார். மொத்தத்தில் நாட்டு மக்களை குழிக்குள் தள்ளினார்.
 

பெட்ரோல் விலை உயர்ந்தது.
 

டீசல் விலை உயர்ந்தது.
 

சிலிண்டர் விலை உயர்ந்தது.
 

காய்கறி விலைகள் உயர்ந்தது.
 

மளிகைச் சாமான்களின் விலை உயர்ந்தது.
 

வேலைவாய்ப்பின்மை உயர்ந்தது.
 

பசியால் துன்பப்படுவோர் கணக்கு உயர்ந்தது.
 

குடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.
 

- இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இப்படி ஒரு மனிதர் இன்னொரு முறை இந்தியாவை ஆள்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்.
 

இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.


 

Stalin's speech in kolkata



இதனை தமிழ்நாட்டில் நான் பார்த்தேன். இப்போது இதோ கொல்கத்தாவிலும் பார்க்கிறேன். எனது ஆட்சி தான் ஊழல் இல்லாத ஆட்சி, எந்த ஊழல் புகாரும் யாராலும் சொல்ல முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னால் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார்.
 

நரேந்திரமோடி இந்தியாவில் இருக்கிறாரா வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ரஃபேல், ரஃபேல் என்று ஆறு மாதமாகச் சொல்லி வருகிறோமே? அது ஊழல் இல்லாமல் வேறு என்ன?  அரசாங்க நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனம் பயன் அடைய கொடுப்பது ஊழல் இல்லாமல் வேறு என்ன? விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இது ஊழல் இல்லாமல் வேறு என்ன?
 

லலித் மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க விட்ட அமைச்சர் சுஸ்மா சுவராஜின் செயல்கள் ஊழல் இல்லையா? நீரவ் மோடியை தப்ப விட்டது ஊழல் இல்லையா? 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா? இது இந்திய வரலாற்றின் கறுப்பு தினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே? யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
 

ஊழலைப் பற்றி நரேந்திரமோடி பேசலாமா?
 

நரேந்திர மோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திரமோடி ஆட்சியில் நடக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும். அதனை நீங்கள் உணர்ந்து இங்கு கூடி இருக்கிறீர்கள்.
 

இப்படிப்பட்ட உணர்ச்சி மயமானகூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு நன்றி.
 

நரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி அவர்கள். மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும் அமித்ஷாவுமே பயப்படுவார்கள்.  அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி அவர்கள்.
 

எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் கொண்டவர் மம்தா பானர்ஜி அவர்கள். கலைஞர் அவர்கள் மறைந்த போது உடனேயே தமிழகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தியவர் மம்தா. அப்படிப்பட்டவர் அழைப்பை எப்ப்போதும் நான் ஏற்பேன். அந்த அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.
 

பா.ஜ.க வை தனிமைப்படுத்த வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.
 

நமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும்!
 

நமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும்!
 

நமது ஒற்றுமை, இந்தியாவைக் காப்பாற்றும்!
 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.