Skip to main content

’தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில்!’ அப்ளாஸ் அள்ளிய ஸ்டாலின் ! 

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்து 2 மாதங்களாக திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நிலையில் திருச்சியில் போட்டியிடுகிறார் என்கிற பேச்சு பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் வைகோவும், ஸ்டாலின் இணைந்து கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்பட்டது. 

 

v

 

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில், ’தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா’வும் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய ’தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை’ நூல் வெளியீட்டு விழா திறந்த வெளி மேடையில் நடைபெற்றது. விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

v

 

புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். புத்தகம் - கலைஞர் உரை தொகுப்பு என்பதால் மதிமுக சார்பில் திமுக அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் தொகை வழங்கப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘‘ஆரியப்பகை சூழ்ந்து வரும் போது கரிகால் பெருவளத்தான் வீறு கொண்டு எழுந்து வீழ்த்தியதைப் போல, சூழ்ந்து வரும் சனாதன பயங்கரவாதத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காக்க, திராவிட இயக்கத்தை காக்க, இனத்தை, பண்பாட்டைக் காக்க இளைஞர்கள் வீறு கொண்டு வர வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் சொல்வது போல் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தை வழிகாட்டுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை நான் வழிமொழிகிறேன்’’ என்றார்.

 

v

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம். இல்லை.... வயிற்றெரிச்சல், பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு எரிச்சல். கலைஞரால் போர் வாள் என்றழைக்கப்பட்டவர் வைகோ. தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில்  திராவிட இயக்கத்தைக் காக்க இணைந்துள்ளோம். வயது முதிர்ந்த நிலையில் தலைவரைச் சந்தித்த போது, ”அண்ணா, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன்” என்றார் வைகோ அண்ணன். அவர் எனக்கு துணை மட்டுமல்ல, நானும் அவருக்குத் துணையாக நிற்பேன் என்று இங்கே உறுதியாகச் சொல்கிறேன்.” கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு என பல போராட்டங்களை வைகோ முன்னின்று நடத்தி வருகிறார். அவர் போராட்டங்களுக்கு துணை நிற்போம்.

பொடாவில் வைகோ வேலூர் சிறையில் இருந்த போது கூட்டணி பேச சந்தித்தேன். இப்போதும் சீக்கிரம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்துள்ளேன். கலைஞர் சொன்னதை நாங்கள் கூட சில நேரங்களில் மீறியிருக்கிறோம். ஆனால் வைகோ எப்போதும் மீறியதில்லை. கலைஞர் சொல்லி பொடா சிறையிலிருந்து ஜாமீனில் வந்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.

நாடாளுமன்றத்தில் மீண்டும் 40க்கு 40 பெற புயல்வேகப் பயணத்திற்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்க தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்’’ என்று மு.க.ஸ்டாலின் பேசினார். இந்தப் பேச்சு இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. பெரும் கரவோசை எழுந்தது.

பேசி முடித்து அமர்ந்த ஸ்டாலினிடம் வைகோ மகிழ்ச்சியோடு, ”உங்க பேச்சு இன்னைக்கு ரொம்ப பிரமாதமாக இருந்தது. தளபதியும் போர்வாளும் என்று நீங்கள் பேசியதை நானே எதிர்பார்க்கவில்லை” என்று புகழ்ந்து தள்ளினார்.

இந்தக் கூட்டத்தில் மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா, மருத்துவர் ரொகையா, சேரன், சோமு உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


 

சார்ந்த செய்திகள்