





திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி, கலைவாணனுக்கு வாக்குகள் கேட்டு நகரம் முழுவதும் பொதுமக்களை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்க இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு தேர்தல் அறிக்கைகளையும் கொடுத்துவிட்டு, வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தையும், பிரச்சாரத்தை துவக்கத்தையும் கலைஞரின் சொந்த மண்ணான திருவாரூரில் துவங்கினார் மு,க,ஸ்டாலின்.
பிரச்சாரத்திற்கு 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கும் வந்தவர். அங்கிருந்து திருவாரூருக்கு காரில்வந்து சன்னதி தெருவில் தங்கினார். பிறகு ஸ்டாலினின் பாட்டியும், கலைஞரின் தாயாருமான அஞ்சுகத்தம்மாளின் நினைவகத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
20 ஆம் தேதி காலை 7 மணி முதல் திருவாரூர் நகர்ப்பகுதிகளில் உள்ள வடக்கு வடம்போக்கித்தெரு, பிடாரிக்கோயில் தெருக்கள் என முக்கியமான வீதிகளில் வீடு, வீடாக சென்று பிரச்சாரத்தை துவங்கி நடந்தே வீதிவீதியாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டார், அவருக்கு பொது மக்களும் உற்சாகமாக கைகூப்பி வணங்கி வாக்களிப்போம் என்பதை உறுதிளாக உத்தரவாதம் அளித்தனர். 9 மணி வரை ஒவ்வொரு விதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல இருக்கிறார்.