Skip to main content

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒரு உறுதி சொல்கின்றேன்.. எந்தக் கட்சியென்று பார்க்காமல் யாராக இருந்தாலும் அத்துனை பேருக்கும்...ஸ்டாலின் பேச்சு

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

இன்று (25-02-2019) தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல கூட்டுறங்காடு ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில், கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு உரையாற்றினார். 

 

d

 

’’ இந்த ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லோரும் எங்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியாக வந்திருக்கின்றீர்கள். இது நமது கட்சிக் கூட்டம் அல்ல, நமது நிர்வாகிகள் பாதுகாப்பாக சுற்றி நிற்கலாமே தவிர உள்ளே யாரும் வரவேண்டாம். இது பொதுமக்களுக்காக நடத்துகின்ற கூட்டம், இந்த ஊராட்சிக்காக நடத்துகின்ற கூட்டம், பெண்களுக்காக நடத்துகின்ற கூட்டம், உங்களுடைய அடிப்படை பிரச்னைகளை கேட்கின்ற கூட்டம் இந்தக் கூட்டம்,

இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை நாம் இப்போது இந்த ஊரில் கூட்டியிருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும், தமிழ்நாட்டில் 12,500 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இதுபோன்று இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா கிராமங்களிலும் இதுபோன்ற கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க சார்பில் முடிவெடுத்து, அந்தப் பணியை நான் மட்டுமல்ல, எங்கள் கட்சியில் இருக்கக்கூடிய முன்னணித் தலைவர்கள் மட்டுமல்ல மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கட்சியில் சேர்ந்திருக்கக்கூடிய அமைப்பாளர்கள் எல்லோரும் இப்போது அந்தப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டத்தை கூட்டிய கட்சி எந்தக் கட்சி என்று கேட்டீர்கள் என்றால் தி.மு.க தான். வேறெந்த கட்சியும் இதுபோன்று கூட்டவில்லை, கூட்டவும் முடியாது. ஏனென்றால், தி.மு.கதான் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற கட்சி. அதனால் தான் இன்றைக்கு உங்களைப் பற்றிச் சிந்தித்து உங்களுக்காக இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இந்தக் கூட்டம் என்பது கட்சிக்காக அல்ல, உங்களுக்காக. நாங்கள் பேச வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை கூட்டவில்லை. நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். நீங்களும் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்கின்றீர்கள், மகிழ்ச்சியோடு வந்திருக்கின்றீர்கள், பூரிப்போடு வந்திருக்கின்றீர்கள்,

 

இவ்வளவு அமைதியாக இவ்வளவு கட்டுப்பாட்டோடு ஆயிரக்கணக்கில் உட்கார்ந்திருக்கக்கூடிய பெண்களை பார்க்கும் போது உங்களுக்கு தி.மு.க மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கின்றது. அதுதான், இந்த நிகழ்ச்சி, இந்த ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு வந்திருக்கின்றீர்கள். அதற்காக என்னுடைய வணக்கத்தை மகிழ்ச்சியை முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 4 பிரிவாக உட்கார்ந்திருக் கின்றீர்கள், எனக்கு வசதியாகப் போய் விட்டது. இப்பொழுது நீங்கள் உங்களது பிரச்னைகளை சொல்லப்போகின்றீர்கள். உங்கள் பிரச்னை என்று சொன்னால் சொந்தப் பிரச்னை அல்ல. உங்கள் ஊரில் இருக்கக்கூடிய பிரச்னை, அடிப்படைப் பிரச்னைகளான குடிநீர், சுகாதாரம், மின் விளக்கு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற பொதுப் பிரச்னைகளை சொல்லப் போகிறீர்கள்.

 

உங்கள் கையில் வைத்திருக்கும் மனுக்களை கூட்டம் முடிந்ததும் நாங்களே வாங்கிக்கொண்டு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, அதை முடிந்தளவிற்கு செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். ஒரு வேளை முடியவில்லை, என்றால் எல்லாவற்றையும் இப்பொழுதே செய்து முடித்துவிட முடியாது. ஆட்சி வந்ததற்குப் பிறகு செய்வோம். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தி.மு.க தான் ஆட்சிக்கு வரப்போகின்றது, இதில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்களும் அந்த முடிவோடு தான் வந்திருக்கின்றீர்கள். அதனால், உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் பெயருடன் சுருக்கமாக உங்கள் பிரச்னைகளை சொன்னால், அதை நான் குறித்து வைத்துக்கொண்டு, அவை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம், அதிகாரிகளிடத்தில் நாங்கள் எடுத்துச் சொல்வோம் என்ற உறுதியை நம்பிக்கையை எடுத்துச் சொல்லி, உங்களுக்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய வணக்கத்தை தெரிவித்து முன்னுரையை நான் முடித்துக் கொள்கின்றேன்.’’

 

d


 

ஸ்டாலின் பேசி முடித்தபின்னர், அவரிடத்தில் மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர். பின்னர்,ஸ்டாலின் ஆற்றிய உரை:

’’அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தின் நோக்கம் பற்றி நான் உங்களிடத்தில் எடுத்துச் சொன்னேன். இதை எதற்காக நடத்துகின்றோம், இதை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். நீங்களும் அதை நல்ல வகையில் புரிந்துகொண்டு சுருக்காமாக சொல்ல வேண்டிய பிரச்னைகளை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். நான் இதுவரையில் இதுபோன்ற ஊராட்சி சபைக் கூட்டம் 20 கூட்டம் நடத்தி விட்டேன், இன்னும் 1 தான் மீதம் இருக்கின்றது, அதையும் இன்று மாலை முடித்துவிடுவேன், விளாத்திக்குளம் தொகுதிக்கு செல்லப்போகின்றேன். ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெறும் 20வது கூட்டம் இது. நமது தோழர்கள், நமது முன்னோடிகள், நமது நிர்வாகிகள் எல்லோரும் இன்னும் பல கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கின்றேன். இதுவரையில் நான் கலந்துகொண்ட கூட்டத்தில் பெண்கள் அதிகமாக கலந்துகொண்ட கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கின்றது. உங்கள் ஊரில் இருக்கக்கூடிய பிரச்னை உங்கள் கிராமத்தில் இருக்ககூடிய பிரச்னைகளை சொன்னீர்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் மிகவும் சிறப்பாகவும், அதிகமாகவும் பேசியது இந்த ஊராட்சியில் தான். அதுவும் உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகின்றது.

 

இங்கு 40 பேர் தங்களுடைய கோரிக்கைகளை எடுத்து வைத்து பேசினீர்கள். அது 40 பேர் கோரிக்கை மட்டுமல்ல. இந்த ஊரின் கோரிக்கை இங்கு வந்திருக்கக்கூடிய அத்துனைபேரின் கோரிக்கை அதுதான், நீங்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஊரில் உள்ளாட்சி அமைப்பு என்ற ஒன்று இருந்து, இந்த ஊருக்கு பிரசிடென்ட் என்று ஒருவர் இருந்திருந்தால், ஊராட்சித் தலைவர் இருந்திருந்தால் அதுபோல் இந்த பஞ்சாயத்திற்கு ஒரு கவுன்சிலர் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைகள் எல்லாம் வந்திருக்காது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாமல் இருக்கின்றார்கள். நியாயமாக 5 வருடத்திற்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும். அது இந்த ஆட்சியில் நடத்தவில்லை. தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது முறையாக அது நடத்தப்பட்டது. அதனால், தான் தலைவர் கலைஞர் ஆட்சியில் ஊராட்சிகளில் பிரச்னைகள் இல்லாமல் இருந்தது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் இன்றைக்கு சொல்லி இருக்கின்றீர்கள் என்றால், இது ஏதோ பெரிய பிரச்னைகள் இல்லை, சாதாரண பிரச்னைதான்.

 

d

 

குடிநீர், விளக்கு, சாலை வசதி, பேருந்து வசதி, மினி பஸ் வசதி, சாக்கடை வசதி, பட்டா பிரச்னை, பாழடைந்த பள்ளிக்கூடத்தை சீரமைப்பது, ரேஷன் கடை பிரச்னை இதுபோன்ற பிரச்னைகள் தான். அதுவும் குடிநீர் பிரச்னைதான் பெரிய பிரச்னையாக பேசப்பட்டிருக்கின்றது. இதற்கு ஏதோ, லட்சக்கணக்கில் கோடி கோடியாக ஒதுக்கி இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்த ஊருக்கு உள்ளாட்சி அமைப்பு என்ற ஒன்று இருந்திருந்தால், எளிதாக செய்துவிட முடியும். அது இல்லை. இப்பொழுது இந்த ஒட்டப்பிடாரம் தொகுதி ஒரு வருடமாக எம்.எல்.ஏ இல்லாமல் அனாதை தொகுதியாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே, அதுவும் இல்லை, ஒருவேளை எம்.எல்.ஏ இருந்திருந்தால் உங்களுக்காக சட்டமன்றத்திற்கு சென்று குரல் கொடுத்திருக்கலாம். அவர் எந்தக் கட்சி எம்.எல்.ஏவாக இருந்தாலும் சரி அது வேறு. ஆனால், எம்.எல்.ஏ என்று ஒருவர் இருந்திருந்தால் பிரதிநிதி என்று ஒருவர் இருந்திருந்தால் சட்டமன்றத்தில் குரலாவது கொடுத்திருக்கலாம்.

 

ஒரு வருடமாக எந்தக் குரலும் கொடுக்க முடியாத அனாதைத் தொகுதியாக இந்தத் தொகுதி இருக்கின்றது. எனவேதான், நான் இப்பொழுது உங்களிடத்தில் ஒரு உறுதி சொல்லப்போகின்றேன், நீங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு வந்திருக்கின்றீர்கள் தி.மு.க தான் ஆட்சிக்கு வரப்போகின்றது, அதில் எந்த சந்தேகமும் கிடையாது, நாங்கள் தி.மு.கவைத் தான் ஆதரிக்கப் போகின்றோம் என்று வந்திருக்கின்றீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்பதை உங்களிடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அது வந்துவிட்டால் உங்களிடத்தில் இருக்கும் பிரச்னைகள் எளிதாக முடிந்துவிடும்.

 

பில்டிங் கட்டவேண்டும், தொழிற்சாலைகள் கட்ட வேண்டும் பெரிய பெரிய திட்டங்கள் தீட்ட வேண்டும், பாலம் கட்ட வேண்டும் என்ற திட்டங்கள் போடுவதற்கு நாட்களாகும். இவை மிகவும் சாதாரண பிரச்னைகள் இவற்றை மிகவும் சுலபமாக நாங்கள் தீர்த்து வைத்து விடுவோம். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக முதியோர் உதவித்தொகை. அதைப் பற்றிகூட இரண்டு தாய்மார்கள் சொன்னீர்கள். இது இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய ஓ.ஏ.பி என்று சொல்லக்கூடிய முதியோர் உதவித்தொகை பிரச்னை. தி.மு.க ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அவர்கள் கூட இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றார். இவர் தான் தி.மு.க ஆட்சியில் இருந்த போது ஓ.ஏ.பி பிரச்னையை கவனித்தது. அப்போது, இவர் யார்? எந்தக் கட்சி என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. யாரெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டி விட்டால் அந்த விதிமுறை எல்லாம் கிடையாது. இப்பொழுது என்ன செய்துவிட்டார்கள் என்றால் அ.தி.மு.க ஆட்சியில் கட்சிக்காரர்களாக, கட்சிக்காரர்கள் யாரைச் சொல்கின்றார்களோ, அவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்கள். அதற்கு லஞ்சம் கேட்கின்றார்கள், அதற்கு கமிசன் கேட்கின்றார்கள், அதிகாரிகளில் இருந்து எம்.எல்.ஏ வரை அதிலும் கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒரு உறுதி சொல்கின்றேன், எந்தக் கட்சியென்று பார்க்காமல் யாராக இருந்தாலும் அத்துனை பேருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அந்த நம்பிக்கையை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

மகளிர் சுய உதவிக்குழு பற்றி இங்கு பேசினீர்கள், அது இப்போது அனாதையாக்கப்பட்டு இருக்கின்றது. கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது என்று தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத் தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம். ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், அந்த பெண்ணிற்கு திருமண உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் என, பெண்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் கலைஞர் அவர்கள் பல திட்டங்கள் கொண்டு வந்தார். இப்படி அந்தத் திட்டங்களுக்கு மகுடம் சூட்டுவது போன்று ஒரு திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழு திட்டம்.

 

ஆனால், இப்பொழுது மகளிர் சுய உதவிக்குழுவுக்கு மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை. குறிப்பாக, மகளிர்க்கு வங்கிகளில் எந்த ஒரு மரியாதையும் கிடையாது. இப்பொழுது நீங்கள் சொன்னீர்கள் தவறு செய்து விட்டோம், அடுத்த ஆட்சியில் தி.மு.கதான் வரும், ஆட்சிக்கு வர வேண்டும் அப்பொழுதுதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று நீங்களே சொன்னீர்கள், அந்த நம்பிக்கையோடு வந்திருக்கின்றீர்கள். அந்த நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் உங்கள் பிரச்னைகள் கழக ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும் என்கிற உறுதியை நான் உங்களிடத்தில் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.’’
 

சார்ந்த செய்திகள்