ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சுஜித்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திருச்சி சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் குழந்தை சுஜித்தின் கல்லறைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திருச்சி எம்பி திருநாவுக்கரசு, கரூர் எம்பி ஜோதிமணி, கே.என்.நேரு மற்றும் திமுகவினர் இருந்தனர். அதன்பிறகு சுஜித்தின் பெற்றோருக்கு ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 80 மணி நேரம் மீட்புப்பணி நடந்திருந்தாலும் சுஜித்தை உயிருடன் மீட்கமுடியவில்ல்லை, சுஜித்தின் தாய் தந்தைக்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 80 மணி நேரம் எடுத்துக்கொண்டாலும் மீட்புப்பணியை பொறுத்தவரை இந்த அரசு இதில் எடுத்திருக்கக்கூடிய மெத்தன போக்கும் ஒரு காரணம் என நான் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அங்கு இருப்பது மென்பாறையா கடின பாறையா என தெரிந்து வைத்திருக்க வேண்டிய துறை தமிழக வடிகால் வாரியத்துறை. 36 அடி பள்ளத்தில் இருக்கும்போதே குழந்தையை மீட்டிருக்கலாம். அமைச்சர்களோ சில அதிகாரிகளோ தொலைக்காட்சிக்கு பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப்பணியில் காட்டவில்லையோ என்ற ஏக்கம் இருக்கிறது என்றார்.
சுஜித்தின் பெற்றோரை சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு 10 லட்சம் நிதியுதவியும் செய்தார்.