தமிழகத்தில் ஜூலை 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து தேங்கிய நீர் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
புளியந்தோப்பு பகுதியில் டிகாஸ்டர் சாலை, பாடிசன் சந்து உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரில் கலந்து முழங்கால் அளவிற்கு தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் பெண்கள் தவித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.