நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி அருகிலுள்ள மூலக்கரைப்பட்டியை ஒட்டியுள்ள புது குறிச்சிக் கிராமத்தில் “ஜெ“வின் 63வது பிறந்த நாள் ஞாபகார்த்தமாக அ.தி.மு.க கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட பீடத்தில் கல்வெட்டும் பதிக்கப்பட்டது. அப்போதைய நெல்லை புறநகர் அ.தி.மு.க.வின் மா.செ.வான முருகையாபாண்டியன் தலைமையில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில், ஒ.செ. விஜயகுமாரும் கலந்து கொண்டார்.
அந்தக் கல்வெட்டில் மா.செ.முருகையாபாண்டியன், மற்றும் ஒ.செ.விஜயகுமார் இருவரது பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாங்குநேரித் தொகுதி எம்.எல்.ஏ.ரெட்டியார்பட்டி நாராயணனின் தரப்பினர் கடந்த 13 தேதி நள்ளிரவு அதிரடியாக பீடத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டை இடித்து அப்புறப்படுத்திவிட்டு எம்.எல்.ஏ.வின் பெயரைக் கொண்ட கல்வெட்டைப் பதிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்டிருக்கிறது. பொழுது விடிந்த மறுநாள் காலை, பீடம் இடிக்கப்பட்டு கல்வெட்டு அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு பரபரப்பான அ.தி.மு.க.வின் புதுக்குறிச்சி கி.க.செ.வான சுப்பிரமணியன் ஒ.செ.விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஒ.செ.விஜயகுமார் அதுகுறித்து மா.செ. தச்சை கணேசராஜாவிடம் புகார் தெரிவிக்க, அது தொடர்பாக எம்.எல்.ஏ.விடம் பேசிய மா.செ. பழைய நிலையில் கல் கல்வெட்டு அமைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறாராம். இதுகுறித்து ஒ.செ. விஜயகுமார் கூறியது, “அம்மாவின் 63ம் பிறந்த நாள் கொடியேற்ற கல்வெட்டை அகற்றிவிட்டு தனது பெயரிலான கல்வெட்டு, மற்றும் கொடிக்கம்பம் அமைக்க எம்.எல்.ஏ. முயற்சி செய்திருக்கிறார். உடனே மா.செ. தலையிட்டு முந்தைய நிலையில், அது எப்படி இருந்ததோ அதுபடியே இருக்க வேண்டும்” என்று எம்.எல்.ஏ.விடம் தெரிவித்திருக்கிறார் என்றார்.
அ.தி.மு.க.வினராலேயே அ.தி.மு.க.வின் கல்வெட்டு பீடம், தகர்க்கப்பட்டு கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க.வில் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.