கடலூர் சித்தூர் சாலையில் உள்ளது டி எடப்பாளையம். இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரைச் சே ர்ந்த நண்பா என்பவரின் மகன் கலீல் 42வயது. இவர் சவுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் சவுதிக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு தில்ஷாத் என்ற மனைவியும் 11 மற்றும் 7 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் கலீல் தந்தை நண்பாவுக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியின் மகன் தாவூத் பெயரில் அதிக அளவு சொத்துகளை நண்பா எழுதி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நண்பாவுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர் அதே ஊரைச் சேர்ந்த பைரோஸ் என்றும் கூறுகின்றனர். இந்தநிலையில் கலீல் சகோதரன் கரீம் நேற்று முன்தினம் மாலை பைரோஸிடம் சென்று எங்களுக்கு பங்கு கிடைக்க வேண்டிய சொத்தை எனது தந்தைக்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருந்து அவரது இன்னொரு மனைவியின் மகனுக்கு சொத்து கிடைக்க நீயும் உடந்தையாக இருந்தது ஏன் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி திட்டித் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து பைரோஸ் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் கரீமையும் போலீசார் விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதற்காக நேற்று காலை கரீம் மற்றும் அவரின் சித்தி அமீனா ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு பைக்கில் சென்று போலீசாரின் விசாரணையை முடித்துக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எடப்பாளையம் அருகே வரும்போது பின்னால் 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அமீனாவிடம் பைக்கின் பின் சக்கரத்தில் உங்கள் சேலை சிக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். அது உண்மை என நம்பி பைக் ஓட்டிய கரீமிடம் பைக்கை நிறுத்த சொல்லியுள்ளார். கரீமும் பைக்கை நிறுத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட பைக்கில் வந்த மர்ம நபர்கள் சில நொடிகளில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கரீமின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதைக்கண்டு பதறிப்போன அவர் சித்தி அமீனா, அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து சென்ற அவரது உறவினர்கள் கரீமை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கரீம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி. நல்லசிவம், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கரீம் மனைவி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து கரீமை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சொத்தில் பங்கு கிடைக்காத காரணத்தால் கூலிப்படையினரை வைத்து கரீம் கொலை செய்யப்பட்டாரா வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் கலீல் தந்தை நண்பா அவரது நண்பர் பைரோஸ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.