Skip to main content

ஸ்ரீரங்கம் கோவில் விழாக்கள் மற்றும் உற்சவங்கள்! -அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவு

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Srirangam Temple Festivals and Celebrations! - highcourt Order to the temple administration to file a report!

 

 

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கு காலத்தில் நடத்தப்படாத விழாக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய,  ரங்கநாதர் கோவில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளின்படி, உற்சவங்கள், பூஜைகள் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு குழு அமைக்கக்கோரி,  சுவாமி ரங்கநாதர் சார்பில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை எந்த கோவில் விழாக்களும் நடத்தப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு, விழாக்கள், பண்டிகைகள்,  அர்ச்சகர்களின் முடிவுப்படி  நடத்தப்படுகின்றன.’ எனத் தெரிவித்தார். 

 

இதற்கு மனுதாரர் தரப்பில், ‘கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க அர்ச்சகர்களுக்கு அதிகாரம் இல்லை. கோவில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக  முடிவெடுக்க குழு அமைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோவிலில் ஊரடங்கு காலத்தில் நடத்தப்படாத விழாக்கள் குறித்தும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்  நடத்தப்பட்ட விழாக்கள் மற்றும் உற்சவங்கள் குறித்தும்,  அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகத்துக்கு  உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்