பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கடந்த 2018ம் ஆண்டு பதிவிட்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இந்து அறம் அழிக்கின்ற துறையாக இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்புக்கள் வெற்று அறிக்கைகளாகவும், கோயில்களை மூட வேண்டும் என்று கூறுவது போல் இருக்கிறது. இவர் முதல்வர் சொல்வது போல் செயல் பாபு அல்ல, செயலற்ற பாபு.
நீட் தேர்வு மரணங்களுக்கு திமுக தான் காரணம். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் நீட்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை தயார் செய்ய வேண்டியதுதான் பொறுப்புள்ள அரசியல்வாதி செய்கின்ற விஷயம். இல்லையென்றால் அவர்கள் பிரிவினைவாதி" என்றார். மேலும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தமிழக்த்திற்கு ஐபிஎஸ் அதிகாரி ஆளுநராக வருவது புதிதல்ல என்று தெரிவித்தார்.