இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மாவட்ட மீனவரின் விசைப்படகை முல்லைத்தீவு மீனவர்கள் கடலில் மூழ்கடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி மீனவர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
காரைக்கால் அடுத்துள்ள கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான படகில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, 21ஆம் தேதி இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தால் அரசுடமையாக்கப்பட்டது. இதையடுத்து படகின் உரிமையாளர் இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த மீனவர் செல்வமணி படகை நேற்று இரவு முல்லைத்தீவு மீனவர்களால் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் மீனவர்கள் குற்றம் சாட்டியதோடு மனவேதனை அடைந்தனர். இதை அடுத்து காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் சௌந்தரபாண்டியன் மற்றும் காரைக்கால் மாவட்ட உதவி ஆட்சியரை சந்தித்து படகு முழ்கடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “கடல் நீரில் மூழ்கிய மீன்பிடி விசைப்படகுக்கு உரிய இழப்பீட்டை இலங்கை அரசிடமிருந்து பெற்றுதர இந்திய அரசு முன்வரவேண்டும். முல்லைதீவு மீனவர்களால் மூழ்கடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் படகில் இந்திய கொடியை அகற்றி இலங்கை கொடியை வைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்திட வேண்டும்” என்று கூறியுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட படகை இலங்கை மீனவர்கள் மூழ்கடிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.