நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் விதமாக பா.ஜ.க நெசவாளர் அணி சார்பில் நேற்று (18-08-23) ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்து பங்கேற்றார். அதன் பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், “ நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. இன்றைக்கு இருக்கக்கூடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தொடர்பாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் தெரியும் என்று கூறுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதியை அளித்தார்கள்.
ஆனால், இன்றுவரை அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. பள்ளிகளில் நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. ஒரு மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவுக்கு நன்றாக தெரியும். இன்று உயிரிழந்திருக்கக்கூடிய ஒவ்வொரு மாணவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியது திமுகவின் கடமை. உயிரிழந்த சடலத்தின் மீது அரசியல் நடத்துவது திமுகவின் பழக்கம். அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்காக நீட் தற்கொலையை அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மீனவர்கள் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மீனவ மக்களுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் ஏராளமானவை உள்ளன. ஆனால், மோடி அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை ஏற்கவே முடியாது” என்று கூறினார்.