
மின் கம்பிகளில் அணில் ஏறி விளையாடும்போது இரு கம்பிகளில் உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்னபோது ஏகத்திற்கும் கிண்டல் செய்தனர். தொடர்ந்து மீம்ஸ்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அமைச்சர் சொன்னதுபோலவே ஒரு அணில் மீது மின்சாரம் தாக்கி மின்கம்பி அறுந்து விழுந்து, ஒரு புதுமணத் தம்பதியின் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமானதுடன் பல வீடுகளில் டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களும் நாசமான சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள பூவைமாநகர் கிராமத்தில் நேற்று (12.07.2021) மாலை உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து வீடுகளுக்குச் செல்லும் மின்கம்பிகளில் விழுந்து அதிகமான மின்சாரம் போனதால், அந்தக் கிராமத்தில் நேற்று திருமண வரவேற்பு முடிந்துள்ள ஆனந்த் என்பவரது வீட்டின் படுக்கை அறையிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. அதேபோல அந்தக் கிராமத்தில் பல வீடுகளில் டிவி, ஃபேன், பிரிட்ஜ், பல்புகள் போன்ற ஏராளமான மின்சாதனப் பொருட்கள் உயரழுத்த மின்சாரத்தால் எரிந்து சேதமடைந்தன.
இத்தனை பொருட்கள் சேதமடையும் அளவுக்கு உயரழுத்த மின்கம்பி எப்படி அறுந்து விழுந்தது என்று மின்வாரிய அலுவலர்கள் ஆராய்ந்தனர். அப்போது உயரழுத்த மின்கம்பி இணைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் உள்ள பீங்கான் உருளை அருகே அணில் ஒன்று ஏறி விளையாடியுள்ளது. அப்போது மின்கம்பியிலும் பீங்கான் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியிலும் உரசியதால் உயரழுத்த மின்சாரம் தாக்கி எரிந்து இறந்த அணில் மின்கம்பியிலேயே கிடந்தது. அதனால் உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே போகும் மின்கம்பிகளில் விழுந்ததுதான் இந்த சேதத்திற்கு காரணம் என்பதை அறிந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சிறிய அணில் மின்கம்பியில் அடிபட்டு பல லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருட்களை நாசம் செய்திருக்கிறது.