வெள்ளை பாம்பு ஒன்று பொட்டல் வெளியில் ஊர்ந்து கடந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அடுத்துள்ள கரியம்பட்டியில் இருந்து முதுகம்பட்டி என்ற பகுதிவரை தார் சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது நாயக்கனேரி என்ற பகுதியிலிருந்த குளத்தின் அருகில் இருந்து வெள்ளை நிற பாம்பு ஒன்று பொட்டல் காட்டில் ஊர்ந்து சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும் அதை அதிசயத்துடன் பார்த்த அந்த பகுதி கிராம மக்கள் யாரும் அதனை அடிக்கவோ தாக்கவோ முன்வரவில்லை.
தொடர்ந்து அந்த பாம்பானது சாலையைக் கடந்து சென்றது. வெள்ளை நிற பாம்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றாலும் இது மரபணு குறைபாட்டால் இதுபோன்ற பாம்புகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வெள்ளை நிற பாம்பு ஊர்ந்து செல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.