சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடியிடம் மாமூல் வசூலித்த புகாரின் பேரில் ஆய்வாளர் கந்தவேல் உள்பட 6 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் மாமூல் வசூலித்தது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரிக்குமாறு துணை அணையர் கும்மராஜாவுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அழகாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வசூல் வேட்டை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. காவல் நிலையத்திற்குப் புதிதாக பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கூறி மாமூல் வசூலித்துள்ளதாக காவலர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்த முழுமையான விசாரணை அறிக்கை மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கந்தவேல் உள்பட 6 பேரை உடனடியாக இடமாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆய்வாளர் கந்தவேல் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கும், எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.ஐ.க்கள் ரவி சேலம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், சிவன் அன்னதானப்பட்டிக்கும், சந்திரசேகர் அம்மாபேட்டைக்கும், தலைமைக் காவலர் பாஸ்கர் கிச்சிப்பாளையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சேலம் மாநகர காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.