நீட்: 12-ஆம் தேதி போராட்டம்! -அன்புமணி
நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஊரக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நீட் சிதைத்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தமுள்ள 3534 இடங்களில் சென்னை மாணவர்கள் 471 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 113 இடங்களை விட 4 மடங்குக்கும் அதிகமாகும். இதற்குக் காரணம் சென்னையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டப் பள்ளிகளும், தனிப்பயிற்சி மையங்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான். அதேபோல், தனிப்பயிற்சி மையங்கள் அதிகமுள்ள சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதுவும் கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 102 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு அது 182 ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை நெல்லை மாவட்டத்தில் இரு மடங்காகவும், வேலூர் மாவட்டத்தில் மும்மடங்காகவும் அதிகரித்துள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர், சேலம் ஆகிய மாநகராட்சிகள் அமைந்துள்ள 6 மாவட்டங்களிலிருந்து மட்டும் 1345 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த மருத்துவ இடங்களில் 38.05% ஆகும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், தனிப் பயிற்சியும் தான் நீட் தேர்வு வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது என்பதை இது நிரூபித்திருக்கிறது.
அதேநேரத்தில் ஊரக மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 225 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. இப்போது நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் வெறும் 82 பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இது கடந்த ஆண்டு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்காகும். நாமக்கல் மாவட்டத்திலிருந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 957&லிருந்து 109 ஆக குறைந்து விட்டது. கிராமங்களில் மத்தியப் பாடத்திட்ட பள்ளிகளோ, தனிப்பயிற்சி மையங்களோ இல்லை என்பது தான் மருத்துவக் கல்வி வாய்ப்பு குறையக் காரணமாகும்.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிக எண்ணிக்கையில் சேர முடியாததற்கு காரணம் அவர்கள் திறமையற்றவர்கள் என்பது அல்ல. மாறாக, அவர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டதும், தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாதது தான். இவ்வாறாக தங்கள் தரப்பில் எந்த தவறும், எந்தக் குறையும் இல்லாத நிலையில் கிராமப்புற மாணவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அனிதா போன்ற ஊரக ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் திட்டமிட்டு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.
நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடக்கம் முதலே எச்சரித்து வந்ததும், நீட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான். கடந்த 6 மாதங்களாகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீட் தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகளைக் கடந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியதைப் போன்று மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளேன். அதேபோல், இப்போது மாணவர்களும், இளைஞர்களும் போராடத் தொடங்கியிருப்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால், இதற்காக சகோதரி அனிதாவை பலி கொடுக்க நேர்ந்தது தான் மிகவும் வேதனையளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 12&ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, இச்சிக்கலில் தமிழகத்திற்கு சாதகமாக முடிவு கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களைபா.ம.க. முன்னெடுக்கும்.