சேலம் சிறைக் கைதியின் மனைவிக்கு பலான மெசேஜ்களை அனுப்பிய 'மன்மத' சிறைக் காவலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (35). இருசக்கர வாகன பழுதுபார்க்கும் பட்டறை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி நிர்மலா (29) (கணவன், மனைவி இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). வாகனத் திருட்டு வழக்கில் குபேந்திரனை கடந்த 2021ம் ஆண்டு மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கின் விசாரணை, நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நிர்மலா, கணவரைப் பார்ப்பதற்காக சேலம் மத்திய சிறைக்கு சென்று வந்துள்ளார். அங்கு கைதிகளைப் பார்க்க வருவோருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் பிரிவில் விஜயகாந்த் என்ற காவலர் பணியில் இருந்துள்ளார். நிர்மலா கணவரைப் பார்க்க சிறைக்கு வந்தபோது அவருடைய செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட காவலர் விஜயகாந்த், அடிக்கடி செல்போனில் அழைத்து காதல் மொழிகளைப் பேசி வந்துள்ளார்.
முதல்முறை பேசும்போதே, ஒருமையில் பேசியதாகவும், தன்னையும் சார் என்று அழைக்காமல் 'வா..., போ...' என்று அழைக்கும்படியும் கூறியுள்ளார் விஜயகாந்த். இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று நிர்மலா எச்சரித்தபோதும், அவர் விடாமல் வாட்ஸ் ஆப்பில் ஆபாச மெசேஜ்களையும், படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் எல்லை மீறிய விஜயகாந்த், 'சேலத்திற்கு வா... தனிமையாக இருந்துட்டு போகலாம்ல...,' என்று பச்சையாகவே கேட்டுள்ளார்.
கணவர் குபேந்திரன் எப்போதெல்லாம் பிணையில் வெளியே செல்கிறாரோ அப்போதெல்லாம் விஜயகாந்த், நிர்மலாவை தொடர்பு கொள்வதில்லை. அவருடைய செல்போன் எண்ணையும் பூட்டி வைத்து விடுவார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வழக்கு விசாரணைக்காக சேலம் சிறையில் இருந்து குபேந்திரனை நாமக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது விஜயகாந்த் மீண்டும் நிர்மலாவை அழைத்து ஆபாசமாகப் பேசியுள்ளார். விசாரணை முடிந்து குபேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவலர் விஜயகாந்த்தின் சேட்டைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா, ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மர்மமான முறையில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபாலை, கடந்த ஆகஸ்ட் மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் தனபால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இருந்த அதே அனெக்ஸ்-1 பிளாக்கில்தான் குபேந்திரனும் அடைக்கப்பட்டு இருந்தார்.
அப்போது குபேந்திரன், தன் மனைவியிடம் காவலர் விஜயகாந்த், செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், நீங்கள் பிணையில் வெளியே சென்ற பிறகு சிறைத்துறை அதிகாரிகளிடம் சொல்லி விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உதவும்படியும் தனபாலிடம் அழுது புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில், பிணையில் வெளியே வந்த தனபால், நக்கீரன் நிருபரிடம் இந்த தகவலைச் சொன்னார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரித்தோம். “எனக்கு கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பொறுப்பான பணியில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் என்னிடம் ஆபாசமாக பேசலாமா? என்று காவலர் விஜயகாந்திடம் கேட்டேன். ஆனால் அவர் கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. மீண்டும் மீண்டும் அவர் வாட்ஸ்ஆப் மூலம் அழைத்து தொல்லை செய்கிறார். ஏற்கனவே, என் கணவர் மீது மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிட்டனர் என்று நானும், குழந்தைகளும் தவித்து வருகிறோம். இந்த நிலையில் சிறைக்காவலர் விஜயகாந்தால் நாங்கள் நிம்மதி இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்” எனக் கண்ணீருடன் கூறினார்.
இதுகுறித்து நாம் சேலம் மத்திய சிறை ஏ.டி.எஸ்.பி. வினோத் மற்றும் விஜிலன்ஸ் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அவர்களும் இதுகுறித்து முன்பே புகார் வரப்பெற்று, விசாரணை நடத்தி வருவதாகச் சொன்னார்கள்.
இதுபற்றி சேலம் மத்திய சிறை ஏ.டி.எஸ்.பி. வினோத்திடம் கேட்டபோது, “காவலர் விஜயகாந்த் மீதான புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி இருக்கிறோம். அவருடைய செல்போன் எண்ணில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்போதெல்லாம் அழைப்பு சென்றிருக்கிறது என்பது குறித்த 6 மாத சி.டி.ஆர். அறிக்கையை சைபர் கிரைம் பிரிவிடம் கேட்டுள்ளோம். இந்த புகார் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அந்த காவலரை, பார்வையாளர்கள் பிரிவில் இருந்து கவாத்து பயிற்சி மைதானத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன் சி.டி.ஆர். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, காவலர் விஜயகாந்த் பற்றி மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மணிகண்டன் என்ற சிறைவாசியை அவருடைய மனைவி பார்ப்பதற்காக சிறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் முன்பாகவே காவலர் விஜயகாந்த், 'நீ ரொம்ப அழகா இருக்க...' என்று கூறி வழிந்துள்ளார். அதோடு நிற்காமல், அவரை சேலம் நீதிமன்றம் வரை பின்தொடர்ந்து சென்று காபி சாப்பிடவும் அழைத்துள்ள சம்பவமும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதையறிந்த சிறை நிர்வாகம் அவரை எச்சரிக்கை மட்டும் செய்து விட்டுள்ளது. அப்போதே அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் ஒரு கைதியின் மனைவியிடம் பல்லைக் காட்டியிருக்க மாட்டார் என்கிறார்கள் சக காவலர்கள்.
இதுபோன்ற புகார்களை காவலர் விஜயகாந்திடம் உயர் அதிகாரிகள் விசாரிக்கச் சென்றால், வேண்டுமானால் என் செல்போனை சோதனை செய்து கொள்ளுங்கள் என்று நல்லவன் போல் நடிப்பாராம். நிர்மலாவின் புகார் குறித்து விசாரிக்கச் சென்றபோதும் அதேபோல் உத்தமன் வேடம் போட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். பாலியல் ரீதியான பேச்சுகளை அவர் வாட்ஸ்ஆப் மூலமே பேசி வருவதாகவும், பேசி முடித்த பிறகு அழைப்பு விவரங்களையும், குறுந்தகவல்களையும் அழித்து விடுவதாகவும் சொல்கின்றனர். இதனால்தான் அவரை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முடியாமல் திணறி வந்திருக்கிறது சிறை நிர்வாகம். ஆனால் இந்த முறை நிர்மலா விவகாரத்தில் கண்டிப்பாக அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்கிறது சிறைத்துறை வட்டாரம்.