கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 2,731- ல் இருந்து 4,862 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் 4,824 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 38 பேர் என 4,862 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மேலும் 2,481 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 42 பிரத்யேக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சை கொடி அசைத்து திறந்து வைத்தார். '1913' என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.