''ஆயிரம் நிலவே வா'' என்ற புகழ் வாய்ந்த அடிமைப் பெண் படத்தின் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணிம்தான் பாட வேண்டும் என்று காத்திருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
எம்.ஜி.ஆர். படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தார் எஸ்.பி.பி. இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென எஸ்.பி.பி.க்கு காய்ச்சல். ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் ரெக்கார்டிங்குக்கு செல்ல முடியவில்லை. அடிமைப் பெண் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடலை ரெக்கார்டிங்குக்கு எல்லோரும் தயாராக இருந்தார்கள். ஆனால் எஸ்.பி.பி. வரவில்லை.
எஸ்.பி.பி. வரவில்லை என்ற செய்தி, எம்.ஜி.ஆர்.க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே எம்.ஜி.ஆர். ஏன் அவர் வரவில்லை என்று விசாரிக்க சொல்லியிருக்கிறார். காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுப்பதால் அவர் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியன்தான் இந்த பாடலை பாட வேண்டும் என சொன்ன எம்.ஜி.ஆர், உடனே ரெக்கார்டிங்கை கேன்சல் செய்தார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு தன்னை அழைக்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கார் வந்தது. அதனைப் பார்த்து கண்கலங்கினார் எஸ்.பி.பி. தனக்காக மிகப்பெரிய நடிகர் இரண்டு மாத காலம் காத்திருந்ததை நம்ப முடியாமல் இருந்தார். எம்.ஜி.ஆர். நினைத்தப்படியே அந்த பாடல் அமைந்தது. இசைக்குழுவினரும் திருப்தியடைந்தனர்.
ரெக்கார்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆரை சந்தித்த எஸ்.பி.பி., திடீன்னு காய்ச்சல் வந்ததால் வரமுடியவில்லை. எனக்காக இரண்டு மாதம் காத்திருந்ததை நம்ப முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.
அப்போது எம்.ஜி.ஆர், ''தம்பி என் படத்துல ஒரு பாட்டு பாடப்போறேன்னு பெருமையா உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்டே சொல்லியிருப்பீங்க. உங்களுக்கு பதிலா வேற ஒருத்தர பாட வைச்சிருந்தா, அது உங்களுக்கும் உங்கள நேசிக்கிறங்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமா போயிடும். அதை செய்ய நான் விரும்பல, அதனாலத்தான் இந்தப் பாட்டு உங்களுக்காக காத்திருந்தது'' என எஸ்.பி.பி.யின் முதுகில் தட்டிக்கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் ''ஆயிரம் நிலவே வா'' பாடல்தான் தனக்கு பிடித்தது என்று சிவாஜியும் செல்லியிருக்கிறார்