Skip to main content

தென்மாவட்டத்திற்கு குறுக்கு வழியில் வருபவர்களால் அதிகரிக்கும் தொற்று... அச்சத்தில் மக்கள்...

Published on 19/06/2020 | Edited on 20/06/2020

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் வரை தொற்றுள்ளவர்களின் தொடர்பு காரணமாக கரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். அடுத்த சில வாரங்களில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு அதிகாரி, மற்றும் சுகாதாரத் துறையினரின் அயராத பணிகாரணமாக தொற்றுகள் தோன்றாமலிருந்தன. கரோனாவும் மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவே நீடித்தது. மக்கள் நிம்மதியானர்கள்.

ஆனால் அந்த நிம்மதி வெகுநாட்கள் நீடிக்கவில்லை வெளிமாநில, மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்களால் தொற்றின் எண்ணிக்கை எகிறத் தொடங்கி உச்சத்திற்குப் போனதுடன் 2, 3 என்ற அளவில் தொற்றிருந்தது உயர்ந்து, நேற்று 33 பேருக்கு தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டதும், நெல்லை பகுதியில் 19 என்றும், தூத்துக்குடியில் 39 பேரையும் சேர்த்து 91 என்றளவில் உயர்ந்தது பதறடித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தூத்துக்குடியில் 514, நெல்லை 552, தென்காசி 196 என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருப்பது தென்மாவட்ட மக்களின் நிம்மதியை பறித்துவிட்டது.

மேலும் ஆபத்து இன்றோடு முடிவடைவதில்லை என்ற அச்சமும் பரவியுள்ளது, காரணம் தற்போது சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், முடிந்தவரை ஊர் திரும்பிவிட வேண்டுமென்று தென் மாவட்டத்தினர் மூட்டை மூடிச்சுக்களுடன் சென்னையை விட்டுப் புலம் பெயர்கின்றனர். இ-பாஸ் இல்லாவிட்டாலும் உயிர் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகளையும் உடைத்தெரியுமளவுக்கு அவர்களை தள்ளியுள்ளது. ஆனால் இவர்களின் வருகையின் பீதியும் தொடர்புடைய கிராமங்களில் பற்றாமலில்லை.

நேர்வழியில் வந்தால் சிக்கிக் கொள்ளலாம் என்பதால் சோதனைச் சாவடியின் முன்னதாக உள்ள கிராமம் வந்த உடன் தெரிந்தவர்கள், உறவினர்கள் மூலம் குறுக்கு வழியை அறிந்து கிராமங்கள் வழியாகத் தப்புகின்றனர். இவர்களை கண்டறிந்து மடக்குவது காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய சவால். அவர்களைக் கண்டறிவதற்குள் தொற்று வேகமெடுக்கும் அபாயமும் உள்ளது. இதனால் தென்மாவட்டப் பரவல் சென்னையைவிட எகிற வைக்கும் சூழல்.

இதற்கு ஒரு தீர்வு இல்லை எனில் தென்மாவட்ட பரவல், வரும் நாட்களில் எல்லை தாண்டலாம் மேலும் இ-பாஸ் இல்லாமல் வரும் முறைகேடுகள் அதிகரிப்பதால் இவர்களை கண்டறிவதும் சவால். பரவல் வேகமெடுப்பதும் சவால்தான். எனவே அப்படி புலம் பெயர்பவர்களை ஸ்பாட்டிலேயே மடக்கி தொற்று இல்லாவிட்டால் அனுமதிப்பது, தொற்று என்றால் சிகிச்சை என்ற முறை கொண்டுவரப்பட்டால் மட்டுமே தென்மாவட்டங்கள் தப்பும். தொற்றும் கட்டுப்படுத்தப்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆனாலும் தென்மாவட்ட கிராமங்களில், உங்களை இனிதே வரவேற்கிறோம் என்கிற வாசக போர்டுகளை இந்த நோய்தொற்று முடியும்வரை காணமுடியாது. கிராமங்களும் அவர்களை ஏற்குமளவுக்கு மனதளவில் தயாரில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

சார்ந்த செய்திகள்