சுற்றுப்பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். இன்று இரண்டாம் நாளாக கோவையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்று கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை தமிழக முதல்வர் தற்பொழுது ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில், ''எட்டு தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைய உள்ளது. ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் பொழுது புதிய உத்வேகம் ஏற்படுகிறது. கோவை நகர மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து உள்ளேன். கோவை நூலகம் கம்பீரமாக மிகச் சிறப்பாக அமையும். 2026 ஆம் ஆண்டு இந்த நூலகம் திறக்கப்படும். கம்பேக் கொடுத்திருக்கும் செந்தில் பாலாஜி கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார்.
126 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை உற்பத்தி தொழில் வளாகம் கோவையில் அமைக்கப்படும். ஏராளமானவர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். நாட்டின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே சுற்றுலா மேற்கொள்வதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீர், குறைந்த விலைவாசி, அதிக வேலைவாய்ப்பு, பொருளாதாரக் குறியீடு, தொழில் உள்கட்டமைப்பு, சம வாய்ப்பு, அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நுகர்வு, உற்பத்தி என எந்த புள்ளிவிவரத்தை எடுத்தாலும் தமிழ்நாடு தான் முன்னணி மாநிலமாக இருக்கும்.
இதெல்லாம் சாதாரணமாக நடந்தது அல்ல கொள்கையும் லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்குப் பார்வையும் செயல் திட்டமும் கொண்ட மக்களுக்கான அரசை நடத்தியதின் காரணத்தால் தான் இவை சாத்தியமாயிற்று. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த இயக்கத்தை தொடங்கும் பொழுது அண்ணா சொன்னார் 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று. ஆனால் இன்று தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி போய் மேலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் 'தெற்கு தான் வடக்கிற்கே வாரி வழங்குகிறது' அதுதான் உண்மை நிலை. இதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்தவரை கோட்டையில் இருந்தபடி ஆட்சி நடத்துபவராக இல்லாமல் களத்தில் இருந்து பணியாற்றுபவராக இருக்க நினைப்பவன் இந்த ஸ்டாலின். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடிய திட்டங்களை; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தி பெயர் வாங்கி வந்தவன் தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின் என்பதையும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதற்கு உங்களுடைய சப்போர்ட் எப்போதும் எங்களுக்கு வேண்டும்'' என்றார்.