கொள்ளை நோய் கரோனாவின் தாக்குதலைச் சமாளிக்கவும் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும் மக்கள் கூட்டமாகக் கூடுவதையும், நடமாட்டத்தை தவிர்ப்பதற்காகவும் மார்ச் 22 அன்று சுய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார்.
ஏற்கனவே கரோனாவின் கொடூரம் பற்றி அறிந்த நெல்லை தூத்துக்குடி தென்காசி மூன்று மாவட்டங்களின் மக்கள் அன்றைய தினம் காலை 7 மணி முதற்கொண்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டனர். ஏனெனில் அது பற்றி மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் உயிர்காக்கும் தன்மையுமே.
தூத்துக்குடியில் காலை முதலே மொத்தக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. நிச்சயிக்கப்பட்ட ஒன்றிரண்டு திருமணங்கள் தவிர மற்றவைகள் ஒத்திவைக்கப்பட்டன. சாலைகளில் போலீசார் மட்டும் வழக்கம்போல பணியை மேற்கொண்டனர். காலை 11 மணி வாக்கில் பழைய பேருந்து நிலையமருகே இருவர் டூவீலரில் வந்த பொழுது அவர்களை மடக்கிய போலீசார், அவர்களிடம் பாதுகாப்புத் தன்மையை எடுத்துச் சொல்லி, உயிர்காக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அனுசரிக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர்.
நெல்லை தூத்துக்குடி தென்காசி மூன்று மாவட்டங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. காலை 7 மணிக்கு முன்னரே மக்கள் தங்களுக்கான அத்தியாவசியமான பால் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றுவிட்டனர். அதற்காக மட்டுமே வெளியே வந்தனர்.
மாவட்டங்கள் முழுவதிலும் இது போன்ற வெறிச்சோடிய நிலைதான். பேருந்துகள் பிற வாகனங்கள் இயக்கப்படவில்லை.