2022 ஆண்டிற்கான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க அறக்கட்டளை திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 285 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்கள்.
தேசிய ஊட்டச்சத்து தினமான இன்று தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா தி.நகர் சர். பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளும் மற்றும் தொடர்ச்சியாக சத்து ஊசிகள், சத்து உணவுகள் சாப்பிடும் குழ்ந்தைகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்விற்குப் பின் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வரின் மிக பிடித்தமான திட்டம் காலை உணவுத் திட்டம் தான். அதுவும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இதற்கென தனி செயலி உருவாக்கப்பட்டு அனைத்து பள்ளிகளும் இணைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிச்சடி உப்புமா பொங்கல் மூன்றும் மாறி மாறி வழங்கப்படுகிறது. பிள்ளைகள் உப்புமாவோடு சாம்பார் வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதையும் அரசு விரைவில் நிறைவேற்றும்” எனக் கூறினார்.
மேலும் இந்நிகழ்வை குறித்து தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், “தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இன்று சைதை தொகுதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு 285 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.