Skip to main content

கொடைக் குருதியில் நோய்த் தொற்று-கொடையாளியைத் தேடிய அரசு மருத்துவமனை நிர்வாகம்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

 

கல்லூரி மாணவர்களிடையே சமூக அக்கரையை மேம்படுத்தும் வகையில் கடந்த மாதம் விருதுநகரில் அரசு மருத்துவமனை சார்பில் கல்லூரி மாணவர்களின் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் சுமார் 300 பேர்களும், அதன் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் 150 பேர்கள் என்று மொத்தம் 450 மாணவர்கள் தங்களின் குருதியைக் கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

 

bl

 

முறைப்படி ரத்தம் பெறுவதற்கு முன்பு அந்த மாணவனின் ரத்தம் எந்த வகை குரூப்பைச் சேர்ந்தது என்று சோதனை செய்யாமல், அவர்களிடமிருந்து ரத்த நன்கொடை பெற்ற அரசு மருத்துவமனை நிர்வாகம், மாணவர்களிடமிருந்து அவனது பிளட் குரூப், பெயரை மட்டுமே பெற்றுக் கொண்டு அவர்களது ரத்தங்களை அரசு பிளட் பேங்க்கில் வைத்திருக்கிறது. இதே போன்று தான் அனைத்து மாணவர்களிடமிருந்தே விபரங்கள் பெறப்பட்டிருக்கிறது. தவிர மாணவர்கள் குருதிக் கொடை கொடுத்ததற்கு மொத்தமாக, சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்குச் சான்றிதழையும் கொடுத்திருக்கிறது அரசு மருத்துவமனை நிர்வாகம். தற்போது சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தப்பட்டதில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தேசமே பிரளயப்பட்டுப் போய்க்கிடக்க, அவசர அவசரமாக விருதுநகர் அரசு மருத்துவமனை நிர்வாகம், நன்கொடை தரப்பட்ட ரத்தங்களைச் சோதித்திருக்கிறது. அதில் அண்மையில் கல்லூரி மாணவர்களிடம் பெறப்பட்ட ரத்தத்தில் ஒரு மாணவனின் ரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் தொற்றான மஞ்சள் காமாலையின் தாக்கமிருப்பதைக் கண்டு அதிர்ந்து சிகிச்சைக்காக அந்த மாணவனைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம் முடியவில்லையாம்.

 

 சுபாஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்ற அந்த மாணவன் ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர்ச் சாலையிலிருக்கும் கிராமத்தைச் சார்ந்தவனாம். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பலமுறை கல்லூரியைத் தொடர்பு கொண்ட பிறகே மாணவன் தொடர்பான விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறது.

 

இந்த விஷயம் கல்லூரி மட்டத்தில் பரவிய அடுத்த கணம், கல்லூரி பேராசிரியர் ஒருவர், அந்த மாணவனை அழைத்து விஷயத்தைப் பக்குவமாகத் தெரியப்படுத்தி உடனடியாக சிகிச்சை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். தற்போது அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

 

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதை தான்.
 

சார்ந்த செய்திகள்