மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட திடீர் தீபத்து எரிந்து பல்வேறு பகுதிகளுக்கும் பரவி கடந்த 4 நாட்களாக காட்டையே எரித்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், சென்னை, கோவையைச்சேர்ந்த 36 பேர் நேற்று தேனி மாவட்டம் போடியில் குரங்கணி மலைப்பகுதி அருகே உள்ள கொழுக்கு மலைக்கு சென்றனர் .
இவர்களில் 7 பேர் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள், அமைச்சர்களின் பார்வையில் 100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவைத்தாண்டியும் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.
நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி காட்டுத்தீக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். 12 பேர் 75 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். பலியானவர்களில் 5 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் என்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் பாக்யராஜ் நம்மிடையே தெரிவித்தார்.
அவர் மேலும், இரண்டு பக்கமும் தீ பரவி வந்ததால் நடுவில் இருந்த ஓடையில் ஓடியிருக்கிறார்கள். அதனால்தான் ஓடையில் வரிசையாக இறந்து கிடக்கிறார்கள். உடல் தீயில் வெந்து இருப்பதால் தூக்குவதில் சிரமம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ், வனத்துறை அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணி நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.