நீலகிரி மாவட்த்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக மசினகுடி, மாயார், பொக்காபுரம், சிங்காரா, வாளைத்தோட்டம் 309 அறைகளை கொண்ட 27 காட்டேஜ், ஹோட்டல் வளாக கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் இன்று துவக்கினர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனால் யானைகள் மட்டுமின்றி வன விலங்குகள் நகருக்குள் ஊடுருவி பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்திற்கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த சில வருடங்களுக்கு முன் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 10 வருடங்களாக நடந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை கணக்கெடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது.
கணக்கெடுக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது யானைகள் வழி தடத்தில் உள்ள 309 அறைகள் கொண்ட 27 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் இன்று துவக்கினர். தற்போது 27 கட்டிடங்களுக்கு 48 மணி நேரத்திற்குள் காலி செய்யவேண்டும் என நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்ட பிறகு இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் காவல் துறை உதவியோடு சீல் வைக்கும் பனி தொடங்கியது. இந்த உத்தரவு குடியிருப்புகளுக்கு பொருத்தாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.