விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் 40 வயதான தயாளன். இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில் இவரது தாய் (67 வயது) முத்தாலம்மன் என்பவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை தயாளன் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது தாயார் மகன் தயாளனிடம் 'நான் இந்த நோயிலிருந்து பிழைப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே நான் உயிரோடு இருக்கும்போதே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த தயாளன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது தாயாரைப் பார்க்க வந்திருந்த கோனூரைச் சேர்ந்த தனது தாய் மாமன் ஏழுமலையிடம் தாயார் கூறியதை எடுத்துக் கூறியுள்ளார்.
உடனே ஏழுமலை தனது மகள் 27 வயது காயத்ரியிடம் மாமன் தயாளனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். காயத்ரியும் திருமணத்திற்குச் சம்மதிக்க உடனடியாக உறவினர்களை அங்கு வரவழைத்து திருமணம் குறித்து மருத்துவமனை வளாகத்திலேயே பேசி முடிவு செய்து காயத்ரியின் சம்மதத்துடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை காயத்ரிக்கும் தயாளனுக்கும் திடீர் திருமணம் நடந்துள்ளது.
அந்த திருமணத்தை அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வந்திருந்த பொதுமக்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர். திருமணம் நடந்தவுடன் மணமக்கள் இருவரும் தயாளனின் தாயார் முத்தாலம்மனிடம் ஆசி வாங்குவதற்காக மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் கரோனா நோயாளியாக உள்ள அவரைப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மணமக்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை மருத்துவர்கள் மூலம் தனது தாயிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு மணமக்கள் வீட்டுக்குப் புறப்பட்டனர். தாய் முத்தாலம்மன் வீட்டுக்கு வந்து தங்களை ஆசீர்வதித்து வாழ்த்துவார் என்று மணமக்கள் கூறி சென்றனர்.