மகனை கிணற்றுத் தண்ணீரில் நீச்சலடிக்க கற்றுக் கொடுக்கப்போய், அந்தக் கிணற்றிலேயே மகனை பறிகொடுத்த சம்பவம் ஈரோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு, 16 வயது அபிராம் விஷால் என்ற மகனும் 11 வயது யோகஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இதில், அபிராமி விஷால் பிளஸ் 1 படித்து வந்தார். கரோனா காலத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால், தனது மகனுக்கும் மகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க விரும்பினார் தந்தை கதிரேசன்.
மொடக்குறிச்சி அருகே குளூர் என்னுமிடத்தில் உள்ள தனது நண்பரின் தோட்டத்துக் கிணற்றில், மகனுக்கும் மகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கச் சென்றுள்ளார். 11ஆம் தேதி மகன், மகள் இருவரது இடுப்பிலும் பிளாஸ்டிக் கேன்களை கட்டி, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தார். சிறிது நேரம் பயிற்சிபெற்ற நிலையில், மூச்சு வாங்குவதாகக் கூறி ஓய்வு எடுப்பதற்காகக் கிணற்றுத் திட்டு மீது ஏறிய மகன் ஆபிராம் விஷால் அங்கு சிறிது நேரம் நின்றுள்ளார்.
அப்போது, இடுப்பில் கட்டியிருந்த பிளாஸ்டிக் கேன்களை கழட்டி கீழே வைத்தார். எதிர்பாராத நிலையில், நிலைதடுமாறிய அந்தச் சிறுவன் அப்படியே கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அப்போது அந்தக் கிணற்றுக்குள் மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த கதிரேசன் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வேறு வழி இல்லாமல் ஒரு கையில் மகளை பிடித்துக் கொண்டு மறுகையில் மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மகனை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் கண் முன்னே மகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
பிறகு, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள், அந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இறந்த சிறுவனின் உடலை மீட்டனர். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீச்சல் பழகிவிட்டால், தண்ணீரில் ஆபத்து இருக்காது எனத் தனது குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிய தந்தையின் கண்முன்னே, மகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.