
ஆவணபட இயக்குநர் திவ்யபாரதியை ஜூலை 6 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆவண பட இயக்குனர் திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கக்கூஸ் படம் மற்றும் பல்வேறு ஆவண குறும்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒகி புயல் பற்றிய "ஒருத்தரும் வரலை" என்ற ஆவணபடம் எடுத்துவருகிறேன். இதன் டீசர் வெளியிட்டுள்ளேன்.
இந்நிலையில் எனது வீட்டிற்கு போலிசார் வந்து துன்புறுத்துகின்றனர். மேலும் படம் சம்பந்தமாக ஆவணங்களை கேட்டு துன்புறுத்தி வருகிறார்கள். என்னை தேச துரோக வழக்கில் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள் எனவே என்னை போலிஸ்சார் கைது செய்ய இடைகால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது" அரசு தரப்பில் திவ்யபாரதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கூறியதை தொடர்ந்து இதை பதிவு செய்த நீதிபதி் வெள்ளிக்கிழமை ( ஜூலை 6 ) வரை திவ்யபாரதியை கைது செய்ய இடைகால தடை விதித்து வழக்கினை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.