இராமநாதபுரம் மாவட்டம் அச்சந்தன்வயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். காளியம்மாள் - சிவானந்தம் தம்பதியினர் கண்மாய்களில் குத்தகைக்கு மீன்பிடித்து நகரில் இருக்கும் கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்கும் தொழில் செய்து வருகின்றனர். வறுமையான நிலையிலும் சிவானந்தம் தம்பதியினர் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மெரைன் இன்ஜினியரிங் படித்து முடித்து, வளைகுடா நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். தான் வேலைக்குச் சேர்ந்த கையோடு அம்மா - அப்பாவிற்குச் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். தங்கைகளுக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ் கண்ணன் தனது பெற்றோர்களை, நீங்கள் வேலைக்குச் சென்றது போதும் வீட்டில் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உழைத்து வாழ வேண்டும் என்று விரும்பிய சிவானந்தம் மற்றும் காளியம்மாள் தம்பதியினர், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தங்களது பெற்றோர் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்த சுரேஷ் கண்ணன், அவர்கள் மீன் பிடித்து நகரில் விற்க ஏதுவாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவானந்தம், கண்மாய்களில் மீன் பிடித்து காரில் வைத்து நகரில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்து வருகிறார். பெற்றோரின் கஷ்டத்தைப் போக்க சொகுசு காரை வாங்கிக் கொடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சுரேஷ் கண்ணன் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.