தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23ஆம் தேதிவரை) கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மீன் கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க திறந்தவெளியில் தனித்தனி கடைகளாகப் பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (11.08.2021) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது ''கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், வெறும் 38 சதவீதத்தினர்தான் முகக்கவசம் அணிகிறார்கள். வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையில் கொண்டாட வேண்டும். ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, காரமடை பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தொடர்ந்து கூட்டம் கூடுவதாலேயே சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் 24 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் இறந்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என தெருத்தெருவாக சென்று கூறியும் சிலர் முன்வருவதில்லை'' என்றார்.