புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடுமையான வயிற்றுவலி என்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வயிற்றுக்குள் மலக்குடலில் குளிர்பான கண்ணாடி பாட்டில் இருந்தது தான் அதிர்ச்சிக்குக் காரணம். எக்ஸ்ரே ரிப்போர்ட்டுடன் மருத்துவர்கள் குழு இந்த பாட்டிலை எவ்வாறு அகற்றுவது என்று அவசர அவசரமாக ஆலோசனை செய்து உடனே அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது மாற்றுத்திறனாளி இளைஞரின் மலக்குடலில் 21 செ.மீ உயரம், 10 செ.மீ வட்டம் கொண்ட பச்சைக் கலர் குளிர்பான பாட்டில் இருந்ததால் மலக்குடல் பகுதி கிழிந்து சேதமடைந்திருந்தது. பாட்டிலை அகற்றியதுடன் கிழிந்த மலக்குடலுக்கு மாற்றாகச் செயற்கையாக மலக்குடல் பகுதி பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி இளைஞர் வயிற்றில் இருந்த கண்ணாடி குளிர்பான பாட்டிலை அகற்றி மாற்று உறுப்பு பொருத்திய அரசு மருத்துவக் குழுவினரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சுமார் 21 செ.மீ உயரம் உள்ள குளிர்பான பாட்டில் எப்படி மாற்றுத்திறனாளி வயிற்றுக்குள் போனது என்ற கேள்விக்கு, மாற்றுத்திறனாளி இளைஞரை யாரோ கட்டாயப்படுத்தி அவரது மலவாய் வழியாக இந்த பாட்டிலை உள்ளே அழுத்தி இருக்க வேண்டும். வாய் வழியாக இவ்வளவு உயரமான வட்டமான பாட்டில் உள்ளே போக வாய்ப்பில்லை. உயரம் மற்றும் வட்டம் அதிகமாக இருந்ததால் தான் மலக்குடல் கிழிந்து சேதமடைந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாலும் வாய் பேச முடியாததாலும் அவர் இது பற்றி ஏதும் சொல்ல முடியாமல் உள்ளார். அவரது உறவினர்களுக்கும் இது குறித்து எதுவும் தெரியவில்லை. அவராக அந்த அளவு பாட்டிலை உள்ளே அனுப்புவது கடினம். யாரோ இந்த கொடூரமான செயலைச் செய்துள்ளனர் என்கின்றனர். இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.